2024 ஆம் ஆண்டு மகளிருக்கான தமிழ்நாடு மாநிலக் கொள்கையினை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.
இது அனைவருக்கும் சமூக நீதிக் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதையும், பெண்கள் அவர்களின் உரிமைகளை அணுகுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பெண்களின் உண்மையான ஆற்றல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான பேரார்வங்கள் ஆகியவற்றினை அடைவதற்கான சமமான வாய்ப்புகளுடன், இணக்கமான மற்றும் அமைதியான வாழ்க்கையை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு உதவும்.
இக்கொள்கையானது பத்து வருடக் காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும்.
விழிப்புணர்வு, கல்வி, ஆதாயமிகு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் பெண்களின் நிலையை உயர்த்த அரசு முயல்கிறது.
இந்தக் கொள்கை கட்டமைப்பின் குறிக்கோள்
சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல்,
பாலினம் சார்ந்த விதிமுறைகள் மற்றும் நடத்தை தொடர்பான மாற்றங்களை மறுகட்டமைக்கும் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குதல்,
பெண்களுக்கு எதிரான எந்த விதமான பாகுபாடு, அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகள் ஆகியவற்றினை முற்றிலும் எதிர்த்தல்,
பாலினம் சார்ந்த பழமையான கருத்துக்களை முறிப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும்
ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் வகையில் அவர்களை ஊக்குவித்தல்.
இக்கொள்கையானது, பணியிடங்களில் அவர்களின் பங்கேற்பினை அதிகரிப்பதுடன், இளம் பருவ வயது சிறுமிகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும்.
டிஜிட்டல் வெளியில் நிலவும் பாலின இடைவெளியைக் குறைப்பதற்காக எண்ணிம கல்வியறிவை ஊக்குவிப்பதன் மூலமும், ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளில் பணியமர்வதற்கு பெண்களை ஆதரிப்பதன் மூலமும், இந்தக் கொள்கையானது பெண்கள் அரசியலில் பெரிய அளவில் பங்கேற்பதை ஊக்குவிக்கிறது.
இக்கொள்கையானது பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் (தனிப்பட்ட பெண்கள், விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்கள்), ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள், பாதிப்புகள் ஏற்படக் கூடிய தொழில்துறைகளில் ஈடுபடும் பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் முறைசார் மற்றும் முறை சாரா துறைகளில் உள்ள பெண்கள் ஆகியவற்றினை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்தக் கொள்கையின் அமலாக்கத்தினை மதிப்பாய்வு செய்வதற்கும், இடைக்காலத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பரிந்துரைப்பதற்காகவும் அனைத்து துறைகள் உட்பட தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட மகளிர் அதிகாரமளித்தல் குழுவானது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்படும்.
இதே போல் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவானது, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அமலாக்கத்தினை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
இந்தக் கொள்கையானது, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்பாய்வு செய்யப்படும்.