தமிழ்நாட்டில் ஐந்தாவது பிரத்தியேக வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.
ஐந்து ஆண்டுகளில், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்தத் துறைகளுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 2021-22 ஆம் ஆண்டில் 34,221 கோடி ரூபாயிலிருந்து 2025-26 ஆம் ஆண்டில் 45,661 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் 146.77 லட்சம் ஏக்கராக இருந்த மொத்தப் பயிர் பரப்பளவு ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.
இம்மாநிலத்தில் 2019-20 ஆம் ஆண்டில் 29.74 லட்சம் ஏக்கராக இருந்த இரட்டைப் பயிர் சாகுபடி பரப்பளவு ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 33.60 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.
தமிழ் நாடானது, ராகி உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தையும், மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும், நிலக் கடலை மற்றும் சிறு தானிய உற்பத்தியில் மூன்றாவது இடத்தையும் பெற்று உள்ளது.
நிதி ஒதுக்கீட்டின் முக்கிய சிறப்பம்சமாக 1,000 முதலமைச்சரின் விவசாயிகள் சேவை மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
சிறு தானிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு சிறு தானியத் திட்டத்திற்கு 55.44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக 108.06 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு எண்ணெய் வித்துக்கள் என்ற திட்டமானது செயல் படுத்தப் பட உள்ளது.
மாற்றுப் பயிர் சாகுபடி திட்டம் ஆனது, ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் மற்றும் கரும்பு சாகுபடிக்குப் பதிலாக சிறு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடியாக மாற்றுவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு இதற்கு 12.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசினால் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான மற்றும் இலாபகர விலையை (FRP) விட கூடுதலாக ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு சுமார் 215 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப் படும்.
மேலும் கூடுதலாக, ஆற்றுப்படுகை மற்றும் ஆற்றுப்படுகை அல்லாத மாவட்டங்களில் இயந்திர மயமாக்கப்பட்ட நெல் சாகுபடிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), மற்றும் கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய ஐந்து கூடுதல் விளை பொருட்களுக்கு என்று புவிசார் குறியீடுகளைப் பெறுவதற்கு 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில விவசாயிகள் மிகவும் சமீபத்திய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும், அவற்றைத் தங்கள் துறையில் செயல்படுத்தவும் உதவும் வகையில், ஜப்பான், சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு 100 முற்போக்கான விவசாயிகளுக்கு சர்வதேச ஆய்வு சார் சுற்றுலாவிற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக இந்நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்திரி விவசாயிகள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக 10 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைக்கப்படும்.
அதிக விலைமதிப்பு மிக்க மரங்களை வளர்ப்பதை ஊக்குவிப்பதற்கும், மர வளர்ப்பு மீதான விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் தமிழ்நாடு வேளாண் வனவியல் கொள்கை அறிவிக்கப்படும்.
70 சதவீதம் வரையிலான மானியத்துடன் சுமார் 1000 விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் நீரேற்றிகளை வழங்குவதற்கு 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டமானது (மலை வாழ் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்) சுமார் 63,000 மலை வாழ் விவசாயிகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட உள்ளது.