பிரதான் மந்திரி எழுச்சி பெறும் இந்தியாவிற்கான பள்ளிகள் (PMSHRI) முன்னெடுப்பில் இணைய மறுத்ததற்காக, சமக்ர சிக்சா என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
ஆனால் PM SHRI திட்டம் ஆனது, 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துவதுடன் இணைந்ததாகும்.
NEP கொள்கையில் மாநில அரசின் சில முக்கிய ஆட்சேபனைகளில் ஒன்று பள்ளிகளில் மும்மொழி கொள்கையினை ஏற்றுக் கொள்வதை வலியுறுத்தும் அத்திட்டத்தின் ஒரு அம்சமாகும்.
1968 ஆம் ஆண்டு NEP கல்விக் கொள்கையில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மும்மொழி கொள்கை கருத்தாக்கமானது 2020 ஆம் ஆண்டு NEP கொள்கையிலும் தக்க வைக்கப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டு NEP கொள்கையானது, இந்தி மொழியானது நாடு முழுவதும் கட்டாய மொழியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.
இந்தி மொழி பேசும் இந்திய மாநிலங்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு நவீன இந்திய மொழியை, பெரும்பாலும் தென்னிந்திய மொழியை கற்பிக்க வேண்டியிருந்தது, அதே நேரத்தில் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் உள்ளூர் பிராந்திய மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு நேர்மாறாக, NEP 2020 கொள்கையானது எந்த மாநிலத்தின் மீதும் எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் திணிக்காத வகையில் அதிக தகவமைப்பினைக் கொண்டு உள்ளது.
1937 ஆம் ஆண்டில், சென்னையில் ஆட்சி செய்த C. இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி) அவர்களின் அரசாங்கமானது, மேல்நிலைப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க முன்மொழிந்த போது, நீதிக் கட்சி அதை கடுமையாக எதிர்த்தது.
1965 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் இந்தி மொழியை முதன்மை/ஒரே அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு நெருங்கியபோது, தமிழக மாநிலம் ஆனது வன்முறை மிக்க எதிர்ப்புகளை வெளிப்படுத்தியது.
மும்மொழிக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தி மொழியினைக் கற்பிப்பதை ஒரு கட்டாயமாக்கிய அலுவல் மொழிகள் (திருத்தம்) சட்டம், 1967 மற்றும் அலுவல் மொழித் தீர்மானம், 1968 ஆகியவற்றை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்ட போது மீண்டும் போராட்டம் வெடித்தது.
1968 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று, C.N. அண்ணாதுரை தலைமையிலான முதல் அரசாங்கத்தின் தலைமையிலான சென்னை சட்டமன்றம் ஆனது, மும்மொழிக் கொள்கையினை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு பள்ளிகளில் உள்ள பாடத் திட்டத்திலிருந்து இந்தி மொழியை நீக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
அப்போதிலிருந்து, தமிழ் மற்றும் ஆங்கில மொழியைக் கற்பிக்கும் வகையில் இரு மொழிக் கொள்கையை தமிழக மாநிலம் உறுதியாகப் பின்பற்றி வருகிறது.
2019 ஆம் ஆண்டில், கஸ்தூரிரங்கன் குழு ஆனது தேசியக் கல்விக் கொள்கை வரைவில் இருந்து கட்டாய இந்தி மொழிக் கற்றல் பிரிவை நீக்குவதற்கு வழி வகுத்தது.
2019 ஆம் ஆண்டில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நிதி ஆதரவினை வழங்குவதற்காக மத்திய நிதிநிலை அறிக்கையில் 50 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது.