20 ஆண்டு காலத் தரவுகளை ஆய்வு செய்து, தமிழகத்தில் வனப் பரப்பினை அதிகரிப்பதற்கான கொள்கை சார் முக்கியத்துவம் வழங்க வேண்டியப் பகுதிகளை மாநில திட்டக்குழு கண்டறிந்துள்ளது.
இந்த அறிக்கை அந்த ஆணையத்தின் தமிழ்நாடு மாநில நிலப் பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி தற்போது 2003 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 226 சதுர கிலோ மீட்டர் அளவிலான அடர்ந்த காடுகள், 2011-2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 348 சதுர கிலோ மீட்டர் மிதமான அடர்ந்த காடுகளின் இழப்புடன் இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
நம் மாநிலத்தின் வனப் பரப்பில் சென்னை, திருவாரூர், கரூர், நாகப்பட்டினம் மற்றும் பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்கள் 1.89% பங்கினை மட்டுமே கொண்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தின் வனப்பரப்பு கடந்த இருபது ஆண்டுகளில் 20.47% குறைந்து உள்ளது, அதைத் தொடர்ந்து விழுப்புரம் (13.85%), காஞ்சிபுரம் (13.03%) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தருமபுரி ஆனது 409 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் திறந்தவெளி காடுகளை இழந்து உள்ளது.
2001 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் மாநிலத்தில் 1,630 சதுர கி.மீ பரப்பளவில் மரங்களின் பரவல் பதிவாகியுள்ளது.
தேசிய சதுப்புநிலங்களின் பரப்பில் தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்களின் பங்கு 0.9% மட்டுமேயாகும்.
தமிழ்நாட்டில் 2001 ஆம் ஆண்டில் 23 சதுர கிலோ மீட்டராக இருந்த சதுப்பு நிலப் பரப்பு ஆனது 2017 ஆம் ஆண்டில் 49 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளதாகப் பதிவாகி உள்ளது.
ஆனால் தமிழகம் 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 4 சதுர கிலோ மீட்டர் அளவிலான சதுப்பு நிலங்களை இழந்துள்ளது.