பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ், தலித் கிறிஸ்தவர்களையும் கொண்டு வரக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டது.
பௌத்தர்கள், சீக்கியர்கள் போன்று தலித் கிறிஸ்தவர்களும் இட ஒதுக்கீட்டில் பயன் பெற வேண்டும் என்று இந்தத் தீர்மானம் கோருகிறது.
1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்டச் சாதிகள்) ஆணையின்படி, இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் பட்டியலிடப் பட்ட சாதியினராகக் கருதப்பட முடியாது என்பதால் அவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது.
மு. கருணாநிதி அவர்கள் 1996, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
மத்திய அரசானது 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நீதிபதி K.G. பாலகிருஷ்ணன் தலைமையில் ஓர் ஆணையத்தினை அமைத்தது.
இடஒதுக்கீட்டில் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களைச் சேர்க்க வேண்டும் என்று முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலிப்பதே இதன் பணியாகும்.
சச்சார் குழு (2005) தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையமானது (2007) 1950 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் ஆணையின் 3வது பத்தியினை நீக்கவும் பரிந்துரைத்தது.
அந்த ஆணையின் 3வது பத்தியானது இந்து அல்லாத எவரும் பட்டியல் சாதியினராக கருத முடியாது எனக் கூறுகிறது.
இந்த ஆணையானது 1956 ஆம் ஆண்டில் சீக்கியர்களையும், 1990 ஆம் ஆண்டில் புத்த மதத்தினரையும் பட்டியல் சாதியில் சேர்த்திட வேண்டி திருத்தப் பட்டது.
தற்போது இந்து, சீக்கியர் மற்றும் பௌத்தர் அல்லாத எவரும் பட்டியல் சாதியினராகக் கருத முடியாது.