அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள தவாங் மாவட்டத்தில், சரிந்து வரும் ரோடோடென்ட்ரான் இனங்களைக் காப்பாற்றும் முயற்சியாக ரோடோடென்ரான் பூங்கா ஒன்று அம்மாநிலத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதில் 30க்கும் மேற்பட்ட ரோடோடென்ரான் இனப் பூக்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட உள்ளது.
ரோடொடென்ரான் என்பது பூக்கும் தாவரங்களின் மிகப்பெரிய இனமாகும். இது பெரும்பாலும் நீலகிரி, கிழக்கு மற்றும் மேற்கு இமயமலைகளில் காணப்படுகிறது.
இந்த வகை இனங்கள் மிதவெப்ப மண்டலக் காடுகளிலிருந்து பனி மண்டலப் புதர்கள் (Alpine Shrubs) வரை பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. ரோடோடென்ட்ரான்கள் குறும்புற்கள் முதல் பெரிய மரங்கள் வரையிலான வகைகளைக் கொண்டதாகும்.
கிழக்கு இமய மலையின் குளிர்தன்மை, ஈரமான சரிவுப் பகுதிகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் போன்றவை ரோடோடென்ட்ரான் இனங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கும், வட கிழக்கு மாநிலங்களின் வளமான பல்வகை இனங்களுக்கும் உகந்த இடமாகத் திகழ்கிறது.
இந்த இனமானது உத்தரகண்ட் மாநிலத்தின் மாநில மரமாக (State Tree) அறிவிக்கப்பட்டுள்ளது. கர்வால் இமயமலையில் இந்த இனத்தின் பூக்கும் நிகழ்வை மலர்களின் திருவிழா என்றறியப்படும் ‘பூல் சங்கிராந்தி‘ (Phool Sankranti) என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.