அனைத்துத் தமிழர்களாலும் திருவள்ளுவருக்காக "திருவள்ளுவர் தினம்" என்று அழைக்கப்படும் ஒரு நாளைக் கொண்டாடுவதற்கான தீர்மானமானது 1935 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று காளி சிவகண்ணுசாமி பிள்ளை மற்றும் பத்மஸ்ரீ வி. சுப்பைய்யா ஆகியோரால் நிறைவேற்றப்பட்டது.
முதலாவது திருவள்ளுவர் தினமானது 1935 ஆம் ஆண்டு மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள், டி.பி. மீனாட்சிசுந்தரம் மற்றும் திரு. வி. கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப் பட்டது.
தற்போதையக் காலகட்டத்தில், இது பொதுவாக ஜனவரி 15 அல்லது 16 ஆம் தேதிகளில் தமிழகத்தில் அனுசரிக்கப் படுகின்றது. இது பொங்கல் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கொண்டாடப் படுகின்றது.
திருவள்ளுவர் ஆண்டானது வள்ளுவர் ஆண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. இது தமிழ்நாட்டில் பயன்படுத்துவதற்காக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தமிழ் நாள்காட்டி முறையாகும்.
பரவலாகப் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் நாள்காட்டியுடன் ஒப்பிடும் போது, திருவள்ளுவர் ஆண்டானது கூடுதலாக 31 ஆண்டுகளைக் கொண்டிருக்கும்.
உதாரணமாக, கிரிகோரியன் நாள்காட்டியில் 2019 ஆம் ஆண்டானது திருவள்ளுவர் ஆண்டு முறையில் 2050 ஆக இருக்கும்.
1971 ஆம் ஆண்டில், திருவள்ளுவர் ஆண்டானது கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசாங்கத்தால் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இது 1972 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
1981 ஆம் ஆண்டில் மதுரையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டில், அப்போதைய முதலமைச்சரான எம். ஜி. ராமச்சந்திரன் திருவள்ளுவர் ஆண்டை அனைத்து அரசாங்க ஆவணங்களிலும் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கு வேண்டி ஒரு முறையான உத்தரவைப் பிறப்பித்தார்.