தில்லியின் ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் திட்டம் – 2019
November 6 , 2019 1849 days 745 0
ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் திட்டத்தின் மூன்றாவது பதிப்பு தற்பொழுது தில்லியில் தொடங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் திட்டமானது ஒரு மகிழுந்துப் பங்கீட்டு முறையாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தில் ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை தேதிகளிலும் கடைசி இலக்கத்தில் இரட்டைப்படை எண் கொண்ட வாகனங்கள் இரட்டைப்படை தேதிகளிலும் சாலைகளில் அனுமதிக்கப் படும்.
தில்லியில் உள்ள சாலைகளில் இயங்கும் போக்குவரத்து அல்லாத அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பிற மாநிலங்களிலிருந்து தில்லிக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும்.
ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் திட்டத்தைச் செயல்படுத்தும் போது தில்லி மெட்ரோ ரயில் கழகமானது 61 கூடுதல் பயணச் சேவைகளை வழங்க இருக்கின்றது.
இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், அவசர ஊர்தி வாகனங்கள் & அமலாக்கத் துறை வாகனங்கள், சீருடையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் மகிழுந்துகள் உள்ளிட்ட 29 வகை வாகனங்கள் இந்த ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் மட்டுமே தனியாக ஓட்டிச் செல்லும் வாகனங்கள், பெண்களை மட்டுமே கொண்டுள்ள மகிழுந்துகள் மற்றும் 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுடன் வாகனத்தை இயக்கும் பெண்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட இருக்கின்றது.
மேலும் மாற்றுத் திறனாளிகளைக் கொண்டுள்ள மகிழுந்துகள் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவற்றிற்கும் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் படுகின்றது.
ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் திட்டத்திலிருந்து இரு சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப் படுகின்றன.
தில்லி அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் வாகனங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் விதிவிலக்கு கிடையாது.
இந்தத் திட்டத்தின் கீழ் தனியாருக்குச் சொந்தமான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்கள் மற்றும் இரண்டு வகை ஆற்றலால் இயங்கும் கலப்பு எஞ்சின் கொண்ட வாகனங்களுக்கும் இந்த முறை விலக்கு அளிக்கப்பட மாட்டாது.