உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய போட்டித் தேர்வுகள் முகமையினை (National Testing Agency - NTA) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முகமையானது இந்திய சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் (Indian Societies Registration Act) ஓர் கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்படும்.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்படும் சிறந்த கல்வியாளரை தலைவராகக் கொண்டு தன்னாட்சி அதிகாரமும், சுய சார்பு கொண்ட முதன்மை தேர்வு அமைப்பாகவும் இந்த முகமை செயல்படும்.
உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தேசிய போட்டித் தேர்வுகள் அமைப்பு உருவாக்கப்படும் என 2017-18க்கான பொது பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (Central Board of Secondary Education - CBSE) தற்போது நடத்தப்படும் நீட்(NEET), ஜே.இ.இ (JEE) போன்ற பல்வேறு நுழைவுப் போட்டித் தேர்வுகளை ஆரம்ப கட்டமாக இந்த முகமை நடத்த உள்ளது.
போட்டித் தேர்வாளர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காக நுழைவுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் ஆண்டிற்கு குறைந்தபட்சம் இருமுறை இந்த அமைப்பால் நடத்தப்படும்.
முதலாம் ஆண்டின் தொடக்ககால செயற்பாட்டிற்காக இம்முகமைக்கு ஒரு முறை மானியமாக 25 கோடி அளிக்கப்படும். இதன் பின் இவை நிதியியல் தற்சார்புடையவையாக உருவாக்கப்படும்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் , அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (All India Council for Technical Education - AICTE) மற்றும் பிற நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளை நடத்த வேண்டிய பணிப் பொறுப்பு சுமைகளை இந்த அமைப்பு நீக்கும்.