2,000 கி.மீ.க்கும் மேலான பரப்பில் பரவியிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தேயிலை குதிரை வர்த்தக சாலையானது, சீன நாட்டினைத் திபெத் வழியாக இந்தியாவுடன் இணைத்தது.
இப்பண்டைய தேயிலை-குதிரை வர்த்தக சாலையானது, பழங்காலத்தில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகளுக்குச் சாட்சியாக உள்ளது.
சீனாவையும் ஐரோப்பாவையும் இணைத்த பட்டு வர்த்தகச் சாலையைப் போல மிகவும் நன்கு அறியப் படாவிட்டாலும், தேயிலை குதிரை வர்த்தகச் சாலையானது பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கிய வணிகப் பாதையாக இருந்தது.
இத்தேயிலை குதிரை வர்த்தகச் சாலை என்பது ஒற்றை சாலையைக் குறிக்கவில்லை, மாறாக தென்மேற்கு சீனாவில் தொடங்கி இந்திய துணைக் கண்டத்தில் முடிவடைந்த பல்வேறு கிளைப் பாதைகளின் வலையமைப்பைக் குறிக்கிறது.
இரண்டு முக்கியப் பாதைகள் யுன்னான் மாகாணத்தில் உள்ள டாலி மற்றும் லிஜியாங் போன்ற சில நகரங்கள் வழியாகச் சென்று, திபெத்தில் உள்ள லாசாவை அடைந்து, இந்தியாவிற்குள் நுழைகின்றன.
இத்தேயிலை குதிரை வர்த்தகச் சாலையின் தோற்றுருவானது சீனாவில் உள்ள டாங் வம்சத்தின் ஆட்சியில் (கி.பி 618-907) நிறுவப்பட்டது.
புத்தத் துறவி யிஜிங்கின் (கி.பி 635-713) படைப்புகளில் சர்க்கரை, ஜவுளி மற்றும் அரிசி நூடுல்ஸ் போன்ற பொருட்கள் தென்மேற்கு சீனாவிலிருந்து திபெத்திற்குக் கொண்டு செல்லப் பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து குதிரைகள், தோல் பொருட்கள், திபெத்தியத் தங்கம், குங்குமப்பூ மற்றும் பிற மருத்துவ மூலிகைகள் சீனாவிற்கு கொண்டு செல்லப்பட்டன.