தேர்தல் நிதிப் பத்திரத் திட்டத்தைப் (Electoral Bond Scheme) பற்றிய வரையறைகளை (contours) மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் நன்கொடைகளைப் பெறுவதில் அதிகப்படியான வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதற்காகவும், முறைகேடுகள் மற்றும் பணமோசடிகள் நடைபெறுவதை தடுப்பதற்காகவும், கடந்த ஆண்டின் பொது பட்ஜெட்டில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் அறிவிக்கப்பட்டன.
தனிநபர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் பயன்படும் ஓர் இடைப்பட்ட நிதியியல் கருவியே தேர்தல் நிதிப் பத்திரங்களாகும்.
ரூபாய் 2000 வரை நன்கொடையாளரால் ரொக்கமாக நன்கொடையை மேற்கொள்ள இயலும். அதற்கு அதிகமான மதிப்புடைய நன்கொடைகளை கண்டிப்பாக பத்திர வடிவில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசால் குறிப்பிடப்பட்ட வங்கியால் (notified banks), குறிப்பிட்ட பண மதிப்பில் (specified denomination) வட்டியில்லா தேர்தல் நிதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.
இதன்படி, தற்போது இந்திய குடிமக்கள் மற்றும் இந்தியாவிலுள்ள கம்பெனி அமைப்புகள் பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் இந்தப் பத்திரங்களை வாங்கத் தகுதியானவர்கள்.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க முனைவோர், டிஜிட்டல் முறையிலோ, ரொக்கமாகவோ, அல்லது காசோலை மூலமோ கட்டணம் செலுத்தி அதற்கு சமமான மதிப்புடைய நிதிப் பத்திரங்களை அக்குறிப்பிட்ட வங்கியிலிருந்து பெறலாம்.
ரூ.1000, ரூ.10,000, ரூ 1 லட்சம், ரூ 10 லட்சம், ரூ 1 கோடி போன்றவற்றின் பெருக்கல் மடங்குகளின் பண மதிப்புகளை வங்கியில் செலுத்தி அவற்றை பத்திர வடிவில் நன்கொடையாளரால் வாங்க இயலும்.
இந்திய தேர்தல் ஆணையிடத்திடம் பதிவு செய்யப்பட்ட எந்த அரசியல் கட்சிக்கும் நன்கொடையாளர் சுதந்திரமாக இப்பத்திரங்களை பரிசளிக்கலாம்.
இந்த தேர்தல் நிதிப் பத்திரங்கள் தாங்குப் பத்திரங்கள் (Bearer Bonds) போன்றவையாதலால் நன்கொடை வழங்குபவர்களைப் (Donor) பற்றிய அடையாள விவரங்கள் பத்திரங்களைப் பெறும் கட்சிகளுக்கு (Receiver) தெரிய வராது.
அக்குறிப்பிட்ட வங்கியில் வைத்துள்ள தங்களின் வங்கிக் கணக்குகளின் மூலம் 15 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் அப்பத்திரங்களைப் பணமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணைத்திடம் அரசியல் கட்சிகள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்குகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட வேண்டும்.
இப்பத்திரங்கள் தாங்குக் காசோலைகள் (Bearer Cheques) போன்றவையாதலால் கொடையாளி வழங்கிய பத்திரங்களை அரசியல் கட்சிகள் மீட்டெடுக்கும் வரை (redeems) வங்கிகளே கொடையாளியின் நன்கொடை நிதிக்கு பாதுகாவலனாய் செயல்படும்.
தேர்தல் நிதிப் பத்திரத்தின் கீழ் பயன்பெற
அந்த அரசியல் கட்சிகள் கண்டிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
மேலும் அவை அண்மையில் நடந்து முடிந்த மக்களவை அல்லது மாநில சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக ஒரு சதவீதத்துக்கும் குறைவில்லா வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சியாக இருத்தல் வேண்டும்.