நாகாலாந்தில் உள்ள பதினொரு அரசியல் கட்சிகள் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதென்று ஒருமனதாக முடிவு செய்துள்ளன.
வருகின்ற பிப்ரவரி 2018-ல் நடைபெற உள்ள தேர்தலில் அக்கட்சிகள் யாருக்கும் வேட்பாளர் வாய்ப்பு கொடுப்பதில்லை என்றும், வேட்புமனு தாக்கல் செய்யப்போவதில்லை என்றும் முடிவு செய்துள்ளன.
70 ஆண்டுகளாக நீடித்து வரும் நாகா கிளர்ச்சிக்கு தேர்தலுக்கு முன்பாக தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்காக தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாகாலாந்து பழங்குடியின ஹோஹோ மற்றும் குடிமை அமைப்பின் (Nagaland Tribal Hoho and Civil Organisation) முக்கியக் குழு நடத்திய சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தின் பிரிவினைவாத அமைப்பான ஐசக் முய்வாவின் தேசிய நாகலாந்துசோஷலிசக்குழு (National Socialist Council of Nagalim – Issac Muivah/ NSCN-IM) ஆகஸ்டு 2015-ஆம் ஆண்டில் நாகா கிளர்ச்சிக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்கு கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் சட்டமன்றத் தேர்தலானது இந்த ஒப்பந்தத்தையும், அதன் நடவடிக்கைகளையும் சீர்குலைக்கும் செயலென்று அவ்வமைப்பு கூறியுள்ளது.
NSCN-IM அமைப்பானது அசாம், மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் நாகா மக்கள் வசிக்கும் பகுதிகளை நாகாலாந்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
இது அகன்ற நாகாலாந்து (Greater Nagalim) என்றழைக்கப்படுகின்றது.
அரசு விதிகளின்படி திட்டமிட்ட தேர்தலை நிறுத்துவதற்கு அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் அல்லது அசாதாரண சூழல் ஏற்பட வேண்டும்.