மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் விரைவான குடியுரிமைப் பரிசோதனை சேவை - நம்பகமான பயணியர் திட்டத்தினை (FTI-TTP) மத்திய அரசு தொடங்கி வைத்துள்ளது.
இந்திய நாட்டினர் மற்றும் வெளிநாட்டுக் குடியுரிமை கொண்ட இந்திய பயணிகளுக்கு (OCI) மிகவும் விரைவான, சிக்கலற்ற மற்றும் பாதுகாப்பான குடியேற்ற அனுமதியுடன் சர்வதேசப் போக்குவரத்தினை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கட்டாயச் சரிபார்ப்புக்குப் பிறகு, 'நம்பகமானப் பயணியர்' என்ற வெள்ளைப் பட்டியல் உருவாக்கப் பட்டு மின்னணுச் சோதனை வாயில்களில் பயன்படுத்தப்படுவதற்கு என செயல்படுத்தப்படும்.
இதில் பதிவு செய்யப்பட்ட பயணிகள், அங்குள்ள மின்னணு நுழைவாயில்களில் விமான நிறுவனங்களால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுகளை ஊடறி செய்து, பின்னர் தங்களின் கடவுச் சீட்டினை ஊடறி செய்ய வேண்டும்.
பின் மின்னணு நுழைவாயில்களில் பயணிகளின் உயிரளவியல் தரவுகள் அங்கீகரிக்கப் படும்.
அத்தகைய ஒரு அங்கீகாரத்தின் பேரில், மின்னணு நுழைவு வாயில் ஆனது தானாகவே திறக்கப் பட்டு, குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.