தாரிணி என்ற இந்தியக் கடற்படை கப்பல் பயண அணியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியால் 2017ம் ஆண்டிற்கான நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
அனைத்தும் பெண்களாக உள்ள ஆறு பேர் கொண்ட அணியைச் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி, லெப்டினன்ட் கமாண்டர் பிரதீபா ஜம்வால், லெப்டினன்ட் கமாண்டர் ஸ்வாதி பதர்பலி, லெப்டினன்ட் ஐஸ்வர்யா பூபதி, லெப்டினன்ட் H.வித்யா தேவி மற்றும் லெப்டினன்ட் பாயல் குப்தா ஆகியோர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நாரி சக்தி விருதுகளை வழங்கினார்.
அப்போது INSV தாரிணி அணி கடற்பயணத்தில் ஈடுபட்டு இருந்ததினால் அவர்களுக்கு அவ்விருது அப்போது அளிக்கப்பட முடியவில்லை.
இந்த INSV தாரிணி அணி என்பது இந்திய கடற்படையின் புதுமையான திட்டமான நாவிகா சாகர் பராக்கிரம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அனைத்து உறுப்பினர்களும் பெண்களால் ஆன இந்த அணி, கடற்படையில் கடற்பயண நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும், இந்திய அரசின் பெண்கள் மேம்பாட்டுக்கான பங்களிப்பை குறிப்பிட்டுக் காட்டுவதற்காகவும் உலகம் முழுவதும் சுற்றி வரத் திட்டமிட்ட அணியாகும்.
அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தபட்சம் 20000 நாட்டிகல் மைல்கல் கடற்பயண அனுபவத்தை கொண்டிருப்பர்.
இந்த திட்டம் உலக நடைமேடையில் பெண் சக்தியின் உந்துவிசையை வெளிகாட்டிட எண்ணுகிறது.
இந்த பயணம், உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INSV தாரிணி கப்பல் பயணத்தின் மூலம் இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) என்ற திட்டத்தின் வெற்றியை பறை சாற்றிடவும் மேற்கொள்ளப்பட்டது.
ஆறு பேர் கொண்ட இந்த பெண்கள் அணியை தலைமை தாங்கி நடத்தியது லெப்டினன்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி ஆகும். இந்த அணி தமது முதல் உலகளாவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளது.
கடலில் 199 நாட்கள் இருந்து கொண்டு மொத்தம் 254 நாட்கள் நீடித்த இந்த பயணம் 21,600 நாட்டிகல் மைல் தூரத்தை கடந்துள்ளது. இதில் 5 துறைமுகங்களில் ஆஸ்திரேலியாவின் பிரேமான்டில், நியூசிலாந்தின் லிட்டில்டான், பாக்லாந்தின் ஸ்டான்லி துறைமுகம், தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் மற்றும் கடைசியாக மொரிசீயஸ் ஆகிய இடங்களில் நின்று இந்த அணி இறுதியில் கோவாவிற்கு திரும்பியது.
எல்லா ஆறு உறுப்பினர்களும் மூன்று ஆண்டுகளாக கேப்டன் திலீப் தோண்டேவிடம் பயிற்சியளிக்கப்பட்டனர். திலீப் 2009 முதல் 2010 கால கட்டத்தில் உலகை தனியாக சுற்றி வந்த முதல் வெற்றிகரமான இந்தியர் ஆவார்.