ஒரு காலத்தில் அரேபிய மற்றும் யூரேசியக் கண்டங்களுக்கு அடியில் அமைந்திருந்த நியோதெதிஸ் பெருங்கடல் தட்டானது கிடைமட்டமாக உடைந்து வருவதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மாபெரும் கட்டமைப்பு மாற்றம் ஆனது ஜாக்ரோஸ் என்ற மலைகளுக்கு அடியில் நடைபெற்று வருகிறது.
இது தென்கிழக்குத் துருக்கி, வடமேற்கு ஈரான் மற்றும் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதி முழுவதும் பரவியுள்ள ஒரு பரந்த மலைத்தொடராகும்.
மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, அரேபிய மற்றும் யூரேசியத் தட்டுகள் மோதிக் கொள்கின்றன என்ற நிலையில் இந்த ஒரு நிகழ்வானது இந்தப் பெருங்கடல் தட்டினை பூமியின் மூடகத்தினுள் கீழ் நோக்கித் தள்ளியுள்ளது.
இந்தச் செயல்முறை தொடர்ந்து நிகழ்ந்த போது, கீழிறங்கும் ஒரு கடல் தட்டானது ஒரு நங்கூரம் போல செயல்பட்டு, பூமியின் மேலோட்டினை நன்கு இழுத்து, சில மில்லியன் கணக்கான ஆண்டுகளாகக் குவிக்கப்பட்ட வண்டலைக் கொண்ட ஒரு மாபெரும் பள்ளத்தை உருவாக்குகிறது.
அரேபிய மற்றும் யூரேசியத் தட்டுகள் மோதி, ஜாக்ரோஸ் மலைகளை மேலே தள்ளி, காலப் போக்கில் அரிக்கப்பட்டு வண்டல்கள் படியும் போது மெசொப்பொத்தேமிய சமவெளிகள் உருவாகின்றன.