முதலீட்டுப் பங்குகள் (Equity Shares) மீதான நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு (LTCG – Long term Capital Gain) மத்திய அரசு ஆதாய வரியை மறு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள், சம பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளில் ஓர் ஆண்டுக்கு மேல் முதலீடு செய்து ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் லாபம் பெறும் பட்சத்தில், லாபத்தில் 10 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும்.
தற்போது குறுகிய கால மூலதன ஆதாயத்திற்கு (அதாவது ஓர் ஆண்டிற்குள் விற்கப்படும் மூலதன சொத்துக்கள் மீதான வரி) 15 சதவீத வரியை செலுத்த வேண்டும் என்ற நடைமுறை மாற்றப்படாமல் தொடரப்பட்டுள்ளது.
குறுகிய கால மூலதன ஆதாயம் என்பது Short Term Capital Gains – STCG.
இதனால் வரும் நிதி ஆண்டில் கூடுதலாக ரூ.20,000 கோடி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, ஓர் ஆண்டுக்கு மேல் முதலீடு செய்து, ஓர் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் பெறுபவர் விலை குறியீட்டுடன் இணைக்கப்பட்ட இலாபத்தின் பயன் இல்லாமல் (Without the benefit of indexation) இலாபத்தில் 10 சதவீத LTCG வரியை கட்ட வேண்டும்.
விலை குறியீட்டுடன் இணைக்கப்பட்ட இலாபம் என்பது உண்மையான வரிவிதிக்கத்தக்க ஆதாயத்தை கணக்கிடுவதற்காக பணவீக்கத்திற்கு எதிராக பங்குகளின் இலாபத்தை அனுசரிப்பதாகும். (Adjusting the profit against inflation to compute the real taxable gains).
Capital Gain
மூலதன சொத்துகளின் விற்பனையில் கிடைக்கும் எந்த ஒரு இலாபமும் “மூலதன ஆதாயம்“ (Capital Gain) எனப்படும்.
LTCG
பங்குச் சந்தையில் 36 மாதங்களுக்கும் அதிகமான காலத்திற்கு வைக்கப்பட்ட சொத்துக்களின் விற்பனையால் வரக்கூடிய எந்த ஒரு எந்த ஒரு ஆதாயமும் நீண்ட கால மூலதன ஆதாயம் (LTCG – Long term Capital Gain) எனப்படும்.
STCG
பங்குச் சந்தையில் 36 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு வைக்கப்பட்டுள்ள சொத்துகளின் விற்பனையினால் வரக்கூடிய எந்த ஒரு ஆதாயமும் குறுகிய கால மூலதன ஆதாயம் எனப்படும்.