இலக்கு வைக்கப்பட்ட நீண்ட கால ரெப்போ விகிதச் செயல்பாட்டில் ரூ.1.13 லட்சம் கோடி மதிப்புள்ள ஏலங்களைப் பெற்றுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
நீண்ட கால ரெப்போ விகிதச் செயல்பாடு எனும் செயல்பாட்டின் கீழ் மத்திய வங்கியானது ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டு வரை பணத்தை வங்கிகளுக்கு நடைமுறையில் உள்ள ரெப்போ விகிதத்தில் வழங்குகிறது. இதற்குப் பிணையமாக அதற்குப் பொருந்தக் கூடிய காலகட்டத்தில் அல்லது அதற்கு அதிகமான காலத்துடன் இருக்கும் வகையில் உள்ள அரசாங்கக் காப்பாவணங்களை இது ஏற்றுக் கொள்கிறது.
ரிசர்வ் வங்கியின் தற்போதைய பணப்புழக்க சரி செய்தல் வசதி மற்றும் விளிம்பு நிலை வசதி ஆகியவை வங்கிகளின் உடனடித் தேவைகளுக்கு 1 முதல் 28 நாட்கள் கால அவகாசம் வரை பணத்தை வழங்குகின்றன, நீண்ட கால ரெப்போ விகிதச் செயல்பாடு அவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டு வரையுள்ள தேவைகளுக்கான பணத்தை வழங்குகிறது.
சந்தையில் குறுகிய கால வட்டி விகிதங்களை ரெப்போ விகிதம் எனும் கொள்கை விகிதத்திலிருந்து அதிகம் விலகுவதைத் தடுப்பதே நீண்ட கால ரெப்போ விகிதச் செயல்பாட்டு நடவடிக்கையின் நோக்கமாகும்.