1986 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சேவைக் குறைபாட்டிற்கு வழக்கறிஞர்கள் பொறுப்பேற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கறிஞருக்கு எதிராக இது தொடர்பாக எழுப்பப்பட்ட ஒரு புகாரை நுகர்வோர் மன்றத்தில் விசாரிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவ வல்லுநர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்ற 1996 ஆம் ஆண்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
உச்ச நீதிமன்றத்தின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட, 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நெறிமுறையற்ற வணிக நடைமுறைகளிலிருந்து நுகர்வோருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கானதாகும்.
இந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் தொழில்கள் அல்லது தொழில் வல்லுநர்களை உள்ளடக்கியதாக சட்டமன்றம் பரிந்துரைத்ததாக எதுவும் பதிவு செய்யப் படவில்லை.
வழக்கறிஞர்கள் உரிமையியல்/குற்றவியல் சட்டத்தின் கீழ் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, நுகர்வோர் சட்டத்தின் கீழ் அல்ல.