ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையானது நெகிழி மாசுபாடு, பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் வளமான சூழலுக்கான மனித உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தீர்மானத்தினை முதன்முறையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
நெகிழி மாசுபாடு, பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்க இழப்பு ஆகியவை உலகப் பெருங்கடல்களின் வளத்தின் மீது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்பதோடு அடிப்படை மனித உரிமைகளை மிக ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்றும் இந்தத் தீர்மானம் வெளிப்படையாகக் கூறுகிறது.
உற்பத்தி மற்றும் நுகர்வு முதல் கழிவகற்றல் வரையில் நெகிழியின் முழு வாழ்க்கைச் சுழற்சியிலும் மிகவும் தீர்க்கமான, ஒருங்கிணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து நாடுகளையும் இந்தத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் தூய்மையான தண்ணீர் ஆகியவற்றின் மீது நுண் நெகிழிகளால் ஏற்படும் பெரும் அச்சுறுத்தல் உட்பட நெகிழி மாசுபாட்டின் பன்மயத் தன்மையையும் இது அங்கீகரிக்கிறது.
பிரான்சின் நைஸ் நகரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாடு மற்றும் ஜெனீவாவில் நடைபெற உள்ள நெகிழி மாசுபாட்டை உடன் முடிவுக்கு கொண்டு வருவதற்கான உலகளாவிய ஒப்பந்தத்திற்கான இறுதிச் சுற்று மீதான பேச்சு வார்த்தைகள் ஆகியவை இந்த விவகாரத்தில் மேற்கொள்ள உள்ள சில முக்கியமான நிகழ்வுகளாகும்.