மத்திய வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன் அமைச்சகம், விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்காக மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த விவசாயச் (விருத்தி மற்றும் எளிதாக்கல்) சட்டம் 2018-ஐ வெளியிட்டுள்ளது.
இது, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உறுதிபடுத்தப்பட்ட சந்தையை உருவாக்குவதன் மூலம் விவசாயிகளின் இடர்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே வேளையில் உற்பத்தித் திறன் மற்றும் விவசாய செலவு செயல்திறன் (Cost efficiency) ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலமாக வேளாண் வணிகம் மற்றும் உணவுப் பதப்படுத்துதலில் முதலீடுகளை ஊக்குவிக்கிறது.
இந்த மாதிரி வரைவுச் சட்டமானது ஒப்பந்த வேளாண்மை மற்றும் சேவைகளுக்காக ஒழுங்குமுறை மற்றும் கொள்கைக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு முற்படுகிறது.
இந்திய அரசியலமைப்பின் படி, விவசாயம் மாநிலப் பட்டியலில் இருப்பதால் இந்த வரைவு சட்டத்தின் அடிப்படையில் ஒப்பந்த வேளாண்மை மீது மாநில சட்டமன்றங்கள் சட்டத்தை இயற்ற முடியும்.
இந்த மாதிரிச் சட்டமானது, வேளாண்மையை ஊக்குவித்து வேளாண்மைக்கான வசதிகளை ஏற்படுத்தித் தரும் ஒரு சட்டமே தவிர, அதன் கட்டமைப்பில் இது ஒழுங்குமுறை அமைப்பல்ல.
இந்த மாதிரிச் சட்டம் வேளாண் பயிர்களில் ஒப்பந்த வேளாண்மையை மட்டும் உள்ளடக்காமல், கால்நடைகள், பால் பண்ணைகள், கோழிப் பண்ணை ஆகியவற்றின் உற்பத்திப் பொருட்களையும் உள்ளடக்கியது.
ஒப்பந்த வேளாண்மை மற்றும் சேவைகளை கிராமங்கள்/பஞ்சாயத்து அளவில் ஊக்குவிப்பதற்காக இந்த சட்டம் ஒப்பந்த வேளாண்மை வசதியமைப்புக் குழுவை (Contract Farming Facilitation Group - CFFG) நிறுவுகிறது.