பட்டியலிட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு பசையடுக்கு (Creamy Layer) முறை - மத்திய அரசு எதிர்ப்பு
March 30 , 2018 2435 days 788 0
மத்திய அரசு, பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளில் பசையடுக்கு (Creamy Layer) முறையைக் கொண்டு வரும் யோசனையை எதிர்த்துள்ளது.
இந்தியாவின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டுக்கான குடியரசுத் தலைவர் ஆணைக்கு பசையடுக்கு முறை பொருந்தாது என உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம், பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினப் பிரிவினரில் பசையடுக்கு பிரிவினர் அல்லது மிகுந்த வசதியுள்ள நபர்கள் இட ஒதுக்கீட்டுப் பயன்களைப் பெறுவதில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்ற வழக்கை விசாரித்து வருகிறது.
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு பசையடுக்கு முறையைப் புகுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
1992ம் ஆண்டில், இந்திரா சஹானி வழக்கு அல்லது பிரபலமான மண்டல வழக்கு என்று அறியப்படும் வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் எனத் தீர்ப்பளித்தது.
மண்டல் தீர்ப்பு பசையடுக்கு முறையை விலக்கி வைப்பது இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு பொருந்தாது என்றும் தெரிவித்திருந்தது.
தற்போது இந்த மனு எஸ்சி/எஸ்டி பிரிவினரில் உள்ள பசையடுக்கு மக்களுக்கும் இட ஒதுக்கீட்டுப் பலன்களிலிருந்து அதே மாதிரியான விலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என வேண்டுகிறது.
இந்த மனு, 1965ல் அமைக்கப்பட்ட, லோகூர் குழு என்றும் அறியப்படும், பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் வரிசையை திருத்தம் செய்யும் மத்திய ஆலோசனைக் குழுவின் அறிக்கையை குறிப்பிடுகின்றது.
இந்த மனு, பின்தங்கிய நிலைமை என்பது தன்னை அந்த நிலையிலேயே நீடித்திருக்கச் செய்யும் போக்கைக் கொண்டது என்றும், யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டனரோ அவர்கள் தங்களுக்கு அவ்வாறு சலுகைகளையும் பலன்களையும் தொடர்ந்து பெறுவதற்காக வேண்டி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலேயே இருக்க விரும்புவதாகவும் கூறுகிறது. எனவே பிற்படுத்தப்பட்டவர் என்ற நிலைமை என்பது ஒரு சுயநலனுடைய விஷயமாகவே உள்ளது.