- இஸ்லாமில் தற்போது நடைமுறையில் உள்ள பலதாரமணம் மற்றும் நிக்கா–ஹலாலாவிற்கான அரசியலமைப்பு செல்லுபடித்தன்மை குறித்து ஆராய உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய மற்றும் மாநில சட்ட ஆணையங்கள் தமது கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
- முத்தலாக் முறை அரசியலமைப்புக்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்த ஏழு மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இஸ்லாமில் பின்பற்றப்படும் பலதார மணம், நிக்கா-ஹலாலா ஆகியவற்றைப் பற்றி விசாரிக்க அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்துவதற்கான முடிவை எடுத்துள்ளது.
- முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் கீழ், நடைமுறையிலுள்ள பலதாரமணம், நிக்கா-ஹலாலா ஆகியவற்றின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மையை (Constitutional Validity) ஆராய வேண்டி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
- இம்மனுவில், முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஹரியாத்) 1937-ன் கூறுகள் தற்போது வரையில் நிக்கா ஹலாலா மற்றும் பலதாரமணம் போன்ற பாவச் செயல்களை அங்கீகரிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது திருமணமான முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்குத் தீங்கு விளைவிப்பதோடு (பொது ஒழுங்கு, அறநெறி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கிறது), இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 14 (சமத்துவத்துக்கான உரிமை), ஷரத்து 15 (இனம், சாதி, பால் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பதைத் தடை செய்தல்), ஷரத்து 21 (வாழ்வதற்கான உரிமை) ஆகியவற்றை அவமதிக்கிறது.
பலதாரமணம் மற்றும் நிக்கா ஹலாலா
- இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருக்கலாம்.
- நிக்கா ஹலாலாவின் கீழ், இஸ்லாமியப் பெண் மும்முறை வெவ்வேறு தருணங்களில் விவாகரத்து கூறி தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின் மீண்டும் அதே நபரை அப்பெண் திருமணம் செய்ய விரும்பினால், அவர் மற்றொருவரை திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்த பின்னரே தன்னுடைய முதல் கணவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும்.