பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவியல் வழக்குகள்
April 2 , 2024 240 days 346 0
மதிப்பாய்வு செய்யப்பட்ட 514 மக்களவை பாராளுமன்ற உறுப்பினர்களுள் 225 (44%) பேர் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்தச் சங்கத்தினால் (Association of Democratic Reforms - (ADR)) நன்கு ஆய்வு செய்யப்பட்ட சுய-உறுதிப் பத்திரங்களின் அடிப்படையில் இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மதிப்பாய்வு செய்யப்பட்டவர்களில், 100 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட 5% செல்வந்தர்கள் ஆவர்.
கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட தற்போது பதவியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒன்பது பேர் மீது கொலைக் குற்றம் சாட்டப் பட்டு உள்ளது.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் பா.ஜ.க. கட்சியினைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், தற்போது பதவியில் உள்ள 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் தங்கள் மீது பதிவாகியிருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் (21 பாராளுமன்ற உறுப்பினர்கள்) பா.ஜ.க. கட்சியினை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதேபோல், தற்போது பதவியில் உள்ள 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது, மூன்று கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான மிகவும் கடுமையான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவாகியுள்ளது.
73% பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டதாரி அல்லது உயர் கல்வித் தகுதிகளைக் கொண்டுள்ள உறுப்பினர்கள் ஆவர், அதே சமயம் அப்பதவியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் 15% பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.