கட்டிடக்கலையின் நோபல் பரிசு (Architecture Nobel) என்றழைக்கப்படும் பிரைட்ஸ்கர் பரிசினை (Pritzker Prize) வென்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை கட்டிடக்கலை வல்லுனரான பால்கிருஷ்ண வித்தல்தாஸ் தோஷி அடைந்துள்ளார்.
குறிப்பிடத்தகு சாதனை புரிந்தமைக்காக ஆண்டுதோறும், உயிருடன் இருக்கும் கட்டிடக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓர் சர்வதேசப் பரிசே பிரைட்ஸ்கர் பரிசாகும்.
இந்தப் பரிசை 1979-ஆம் ஆண்டு தங்களுடைய ஹையாட் பவுண்டேஷன் (Hyaat Foundation) மூலம் சிகாகோவின் பிரைட்ஸ்கெர் குடும்பம் தோற்றுவித்தது.
இப்பரிசினை வெல்பவருக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டாலருடன் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும்.
குறைந்த விலையிலான வீடுகள் வடிவமைப்பில் முன்னோடியான பால்கிருஷ்ண வித்தல்தாஸ் தோஷி, பாரம்பரிய கட்டிடக் கலையில் வேரூன்றி நிற்கும் நம் நாட்டிற்கு நவீன வடிவமைப்பைக் கொண்டு வந்து நீடித்த கட்டிடக்கலைக்காக பணியாற்றி வருகிறார்.
அஹமதாபாத்தில் உள்ள லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஹௌசிங், ஜெய்ப்பூரிலுள்ள வித்யாதர் நகர், இந்தூரிலுள்ள ஆரண்யா குறைந்த விலையிலான வீடுகள் (Aranya Low Cost Housing) ஆகியவை இவரின் குறிப்பிடத்தக்கப் பணிகளாகும்.