புகையிலையைக் கைவிடும் திட்டம்: 20 லட்சம் பேர் பதிவு
July 24 , 2017 2680 days 1029 0
மத்திய அரசு அறிமுகம் செய்த புகையிலைப் பழக்கத்தைக் கைவிடும் திட்டத்தின் முதலாம் ஆண்டில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ/WHO) தெரிவித்துள்ளது.
புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தும் நபர்களிடையே அவற்றைக் கைவிடும் ஆர்வம் அதிகரித்துள்ளதைக் கவனித்த மத்திய அரசு, இதற்கென நாடு தழுவிய திட்டம் ஒன்றை கடந்த ஆண்டு (2016) ஜனவரி மாதம் தொடங்கியது. இப்பழக்கத்தைக் கைவிடுவோர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்வதற்கு வசதியாக இலவச தொலைபேசி எண் கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு மொழிகளில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் ஓராண்டில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
அவ்வாறு பதிவு செய்தவர்களில் 12000 பேர் தொடர்புடைய விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. அப்போது புகை பிடிப்போர் மற்றும் புகை அல்லாத பிற வகையில் புகையிலையைப் பயன்படுத்துவோர் என்ற இரு பிரிவினருமே இப்பழக்கத்தைக் கைவிடும் விகிதம் சுமார் 7 சதவீதமாக இருந்ததைக் கண்டறிந்தது. இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு செல்லிடப்பேசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சிறந்த வழியாக உள்ளது. குறிப்பாக புகையிலையைக் கைவிடுவது தொடர்பாக குறுஞ்செய்திகளை அப்பழக்கத்துக்கு ஆளானவர்களுக்கு அனுப்பி வைப்பது நல்ல பலனை அளிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.