மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை மட்டுமே வாழ்விடங்களாகக் (endemic) கொண்டுள்ள, “மேவா சிங்“ இருள் தவளைகள் (Night Frogs) எனப் பெயரிடப்பட்ட புதிய தவளை இனத்தை கேரளாவின் கோழிக்கோட்டின் மலபார் வன உயிர் சரணாலயத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
போக்குசார் சூழலியல் (Behavioural Ecology) மற்றும் குரங்கினங்கள் பற்றிய ஆய்வுகளில் (Primate Studies) பெரும் அளப்பரியப் பங்களிப்பை நல்கிய வன உயிர் ஆராய்ச்சியாளரான மேவா சிங் (Mewa Singh) அவர்களை கவுரவிப்பதற்காக புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இருள் தவளைகளுக்கு இவர் பெயர் கொண்டு விலங்கியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கேரளாவின் மலபார் வன உயிர் சரணாலயத்தின் பெருவன்னாமுழி அணைக்கூட்டோடு (Peruvannamuzhi) இணைந்து பாய்கின்ற சிறு சிற்றோடைகளில் இந்த இருள் தவளைகள் காணப்படுகின்றன.
நைக்டிபாட்ராசஸ் (Nyctibatrachus) பேரினத்தைச் சேர்ந்த தவளைகள் இருள் தவளைகள் (Night Frogs) என்றழைக்கப்படுகின்றன. இவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
இவற்றோடு சேர்ந்து தற்போது மொத்தம் 36 இருள் தவளைகள் இனங்கள் இந்தியாவில் உள்ளன.