புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அரிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
April 23 , 2025 17 hrs 0 min 18 0
இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ASI) கல்வெட்டியல் பிரிவானது, சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலையடிப்பட்டி மற்றும் பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் ஒரு சில கல்வெட்டுகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளது.
இந்தக் கல்வெட்டுகளானது கல்வெட்டு நகலெடுப்பு என்ற முறையைப் பயன்படுத்தி, அதன் பாதுகாப்பு மற்றும் தொடர்ந்து மேற்கொண்டு அதன் மீது ஆய்வு மேற்கொள்ளச் செய்வதற்காக மப்லித்தோ காகிதத்தில் நகலெடுக்கப்பட்டன.
குடம்பீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஒரு பாறைக் கல்வெட்டைக் கண்டறிந்தனர்.
ஆரம்பக் கட்ட ஆய்வுகள் ஆனது, இந்தக் கல்வெட்டு 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கிறது.
சுந்தர சோழபுரம் மற்றும் செவ்வலூர் கிராமங்களுக்கு இடையே ஓர் ஊரணி (நீர் சேமிப்புக் குளம்) தோண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நிலப் பிரிவினை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டு ஆகும்.
ஒரு சுனை (நீரூற்று) அருகே கண்டறியப்பட்ட மற்றொருக் கல்வெட்டு ஆனது, மன்னர் இராஜராஜன் சுந்தரபாண்டியன் பெயரைக் குறிப்பிட்டுள்ளது.
செவ்வலூரைச் சேர்ந்த உடையான் பெருமாள் என்ற ஒருவர் இந்த ஒரு நீர்நிலையை உருவாக்கப் பங்களித்ததாக இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொன்னமராவதியில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில், கருவறையின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் ஒன்று, மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்ற மன்னனின் 8 ஆம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்தது.
இந்தக் கோயில் உழவளை நாடு பிரிவின் கீழ் வரும் சோழீஸ்வரர் உடைய நாயனார் கோயில் என்று அழைக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலுக்குள் குறிப்பிட்ட இடங்களில் ஐந்து விளக்குகளை நிறுவுவதற்காக 40 பணம் நன்கொடையாக வழங்கப்பட்டதையும் இந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
கிழக்கு சுவரில் காணப்படும் மற்றொரு கல்வெட்டு ஆனது, மூன்றாம் இராஜராஜனின் ஆறாவது ஆட்சியாண்டினைச் சேர்ந்தது என்றும், இராஜேந்திர சோழ வள நாட்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒரு இடமாக இந்தக் கோயில் இருந்த இடத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.
மேலும் இந்தக் கல்வெட்டு ஆனது அரிசி, நெய் மற்றும் பால் உள்ளிட்ட சடங்கு படையல் பிரசாதங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது.