தெலுங்கானா மாநிலத்தில் புலிகள், கால்வாயைக் கடந்து செல்ல ஏதுவாக சூழலியல் பாலம் (Eco - bridge) அமைக்கப்பட இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ததோபா - அந்தாரி புலிகள் காப்பகத்துக்கும் (Tadoba - Andhari Tiger Reserve - TATR) தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குமரம் பீம் ஆசிப்பாத் மாவட்டத்திற்கும் இடையே கால்வாய் உள்ளது. இதனால் ஒதுக்கப்பட்டக் காடுகள் (Reserve Forest) பிளவுபடுகின்றன. புலிகளால், பிளவுபட்ட வெவ்வேறு காட்டுப் பகுதிகளுக்குச் சென்று வர முடிவதில்லை.
இந்தச் சூழலியல் பாலத்தில் வளமான மண் கொட்டப்பட்டு செடிகளும் புற்களும் வளர்க்கப்பட்டு காடு போன்ற தோற்றமளிக்க வேண்டும்.
பெஜ்ஜீர், தஹிகான் மண்டலத்தில் (Bejjur and Dahegaon) பிரனகிதா தடுப்பணையின் (Pranahita Barrage) வலது கால்வாயின் 72 கிலோ மீட்டர் நெடுக முக்கியமான இடங்களில் இவ்வகைப் பாலங்கள் கட்டப்பட உள்ளன.
பெஜ்ஜீர் வன வரம்பில் சுல்குபல்லி (Sulgupalli) என்ற இடத்தில் கால்வாயின் அகலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் உள்ளது. இங்கு அமையவிருக்கும் பாலம் வன விலங்குகள் கடந்து செல்ல போதுமான அளவு இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா நீர்ப்பாசனத் துறை (Telangana Irrigation Department) இந்தச் சூழலியல் பாலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாலத்தின் அளவு மற்றும் இடத்தை (தேசிய வனவிலங்கு வாரியம்) பரிந்துரை செய்ய காத்திருக்கின்றது.
பிரனகிதா ஆறு
பிரனகிதா நதியானது கோதாவரி நதியின் மிகப்பெரும் கிளை நதி ஆகும். பெண் கங்கா, வார்தா மற்றும் வயின்கங்கா நதிகளின் தண்ணீரோடு சேர்ந்து பிரனகிதா ஆறு கோதாவரியின் 34% வடிநிலப் பகுதிக்குப் பங்களிக்கிறது.
விதர்பா பகுதிகள் மற்றும் தெற்கு சாத்புரா மலைப் பகுதிகளில், பிரனகிதா ஆறு பாய்கிறது.
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்திற்கும் , தெலுங்கானாவில் உள்ள அடிலாபாத் மாவட்டத்திற்கும் இடையேயான எல்லையில் பிரனகிதா ஆறு ஓடுகிறது.