பெண்ணின் 26 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
August 10 , 2017 2664 days 981 0
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதாகும் பெண் ஒருவர், தனது வயிற்றில் இருக்கும் 26 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெண்ணின் உடல்நிலையைப் பரிசோதித்த மும்பையைச் சேர்ந்த மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கருவுக்கு, மண்டையோடு உருவாகவில்லை என்பதை சுட்டிக்காட்டி, அதை முழுவதும் வளர அனுமதிப்பது, பெண்ணுக்கு மனரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பரிசீலித்த நீதிபதிகள், 1971ஆம் ஆண்டு மருத்துவ ரீதியில் கருவைக் கலைக்கும் சட்டத்தின் கீழ், பெண்ணின் கருவைக் கலைக்க அனுமதித்து உத்தரவிட்டனர்.
மேலும், அந்தப் பெண் மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையில் தான், கரு கலைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
கருவை மருத்துவ ரீதியிலான நடவடிக்கை மூலம் கலைக்கும் சட்டத்தின் 3(2)(பி) பிரிவில், 20 வார காலத்துக்கும் மேற்பட்ட கருவைக் கலைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அசாதாரண சூழ்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் மருத்துவ ரீதியில் கருவைக் கலைக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதுபோல், உச்ச நீதிமன்றத்தால் அண்மைக்காலங்களில் ஏராளமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.