2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் எந்தவிதமான விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.
நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்து முடக்கி வந்த நிலையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் பட்ஜெட் எவ்வித விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற அலுவலில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்முறைக் கருவியே கில்லட்டின் (Guillotine) ஆகும்.
பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபின் நாடாளுமன்றம் அடுத்த மூன்று வாரங்களுக்கு இடைக்கால ஓய்வு (Recess) நிலையில் இருக்கும்.
இந்த இடைவெளி காலத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவானது (House Standing Committees) பல்வேறு அமைச்சகங்களினுடைய மானியங்களுக்கான கோரிக்கையை (Demand of Grants) ஆராய்ந்து அதன் மீது அறிக்கையைத் (Report) தயார் செய்யும்.
3 வாரத்திற்குப் பின் நாடாளுமன்றம் மீண்டும் கூடியவுடன் (Reassemble) நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் குழுவானது (BAC - Business Advisory council) அமைச்சகங்களினுடைய மானியங்களுக்கான கோரிக்கை மீது சபை உறுப்பினர்கள் விவாதம் மேற்கொள்ள கால அட்டவணையைத் தயாரிக்கும்.
அளிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து அமைச்சகங்களினுடைய செலவுக் கோரிக்கைகள் (Expenditure demand) அனைத்தையும் விவாதிக்க இயலாது.
எனவே நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் குழுவானது சில முக்கிய அமைச்சகங்களுடைய செலவு கோரிக்கைகளை (expenditure demands) மட்டுமே அவையின் விவாதத்திற்குத் தேர்ந்தெடுக்கும்.
மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய வேளாண் அமைச்சகம், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றினுடைய மானியங்களுக்கான கோரிக்கை விவாதத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும்.
பின்னர் இந்த அமைச்சகங்களுடைய செயல்பாடு மற்றும் கொள்கைகளை அவை உறுப்பினர்கள் விவாதிப்பர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சகங்களின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் முடிந்த பின் அவை சபாநாயகர் “கில்லட்டின்“ நடைமுறையைப் பயன்படுத்துவார்.
இந்நிகழ்வானது பொதுவாக பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினங்களின் கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும்.
கில்லட்டின் பயன்பாடு மேற்கொள்ளப்பட்ட பின், விவாதம் மேற்கொள்ளப்பட்ட மானியக் கோரிக்கைகளோடு சேர்த்து காலம் போதாமையால் விவாதிக்கப்படாது உள்ள பிற அனைத்து மானியக் கோரிக்கைகளும் (outstanding demands) விவாதிக்கப்பட்டதாக கருதப்பட்டு ஒன்றாக குரல் வாக்கெடுப்பிற்கு (Voice Vote) முன்னெடுத்துச் செல்லப்படும்.
உரிய காலத்தில் நிதி மசோதாக்களை நிறைவேற்றுவதை உறுதி செய்வதே இத்தகு நடைமுறையை மேற்கொள்வதன் நோக்கமாகும்.