அமெரிக்க பொருளாதார அறிஞர் ரிச்சர்ட் ஹெச். தாலர்க்கு நடப்பாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளியலுக்கும் , உளவியலுக்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பை வெளிப்படுத்தும் ‘போக்குசார் பொருளாதாரம்’ எனும் துறையில் (Behavioural Economics) அவர் அளித்த சிறந்த பங்களிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
பொருளியலுக்கும், உளவியலுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தி , மனிதர்களின் சுய கட்டுப்பாடு, சமுக விருப்பத்தேர்வுகள் மற்றும் பகுத்தறிவு போன்ற காரணிகள் பொருளாதாரம் குறித்த அவர்களது முடிவுகளில் எப்படி தாக்கத்தையும், அதன் காரணமாக பொருளாதார சந்தையில் எவ்வாறு பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன என தனது ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இவர் சமூக பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள எப்படி போக்குசார் பொருளாதார கருத்துருவாக்கம் உதவுகிறது என்பதைப் பற்றிய “நட்ஜ்” எனும் புத்தகத்தின் துணை ஆசிரியர் ஆவார். இப்புத்தகம் சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று. இதன் மற்றொரு ஆசிரியர் காஸ்.ஆர்.சன்ஸ்டெயின் ஆவார்.
போக்குசார் பொருளாதாரம் என்பது பொருளாதார முடிவுகளில் உளவியல், சமூகம், அறிவாற்றல், உணர்ச்சிக் காரணிகள் ஆகியவற்றின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி விளக்குவதாகும்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசின் தனித்தன்மை
ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவாக பொருளாதார நோபல் பரிசு “சுவரிகிஸ் ரிக்ஸ்பாங்க் பரிசு” (Sveriges Riksbank Prize) எனவும் அழைக்கப்படுகிறது.
இப்பரிசு பொருளாதார அறிவியல் பிரிவில் வழங்குவதற்காக 1968 ல் தோற்றுவிக்கப்பட்டது.
1895 -இல் டைனமைட்டை கண்டுபிடித்த ஆல்பிரைட் நோபல் அவர்களின் விருப்பத்தில் தோற்றுவிக்கப்பட்ட நோபல் பரிசுகளின் உண்மையான குழுவில் பொருளாதார பரிசு தோற்றுவிக்கப்படவில்லை.