திரிபுராவில் மீள்குடியேறிய புரு சமூகத்தினைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் நிரந்தர மீள் குடியேற்றத்திற்குப் பிறகு முதல் முறையாக தற்போது மக்களவைத் தேர்தலில் வாக்களித்தனர்.
மத்திய அரசு மற்றும் திரிபுரா மற்றும் மிசோரம் மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட ஒரு நான்கு தரப்பு ஒப்பந்தத்தின் விளைவாக 2020 ஆம் ஆண்டில் இது மேற்கொள்ளப் பட்டது.
அவர்கள் இதற்கு முன்பு திரிபுராவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்றுள்ளனர்.
முந்தைய மக்களவைத் தேர்தலில், 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் புரு சமூகத்தின் புலம் பெயர்ந்தோர் முகாம்களில் அமைந்த மையங்களிலும், 2019 ஆம் ஆண்டில் மிசோரமின் மாமித் மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாக்குச் சாவடி மையங்களிலும் அவர்கள் வாக்களித்தனர்.
1997 ஆம் ஆண்டில் நடைபெற்ற இன மோதல்களைத் தொடர்ந்து, ரியாங் என்றும் அழைக்கப்படும் சுமார் 32,000 ப்ரு இனத்தவர்கள், மிசோரமிலிருந்து தப்பி திரிபுராவில் தஞ்சம் புகுந்தனர்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் தேதியன்று ஒரு நாற்கர (நான்கு தரப்பு) ஒப்பந்தம் கையெழுத்தானது.
திரிபுராவில் அமைந்துள்ள தற்காலிக முகாம்களில் உள்ள மொத்தம் 32,876 பேரை உள்ளடக்கிய 5,407 புரு சமூகத்தினைச் சேர்ந்த குடும்பங்களை மிசோரமிற்குத் திருப்பி அனுப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.