2017 ஆம் ஆண்டிற்கான மணிப்பூர் சங்காய் திருவிழாவை இந்தியாவின் குடியரசுத் தலைவர் துவங்கி வைத்தார். சங்காய் என்பது மணிப்பூர் மாநிலத்தில் காணப்படும் தாமின் மான் (brow-antlered) வகை ஆகும். இவை மணிப்பூரின் மாநில விலங்காகும்.
2010 ஆம் ஆண்டு துவங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் பத்து நாள் இந்த திருவிழா நடைபெறும்.
மணிப்பூர் மாநிலத்தின் செழுமை மற்றும் பன்முகத்தன்மையினை எடுத்துரைக்கும் விதமாக இந்தத் திருவிழா அமையும்.
இவ்வருடத் திருவிழாவானது இம்பால் நகரம் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும். முதல் முறையாக கெய்புல் லம்ஜாவோ தேசியப் பூங்காவிலும் இத்திருவிழா நடைபெறவுள்ளது. கெய்புல் லம்ஜாவோ (Keibul Lamjao) என்பது மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள மிதக்கும் தேசியப் பூங்காவாகும் (Floating National Park)
தனித்தன்மை வாய்ந்த இப்பூங்காவில் பல தாமின் மான்கள் வசிக்கின்றன.
சங்காய் திருவிழாவின் ஒரு பகுதியாக இம்பால் நகரத்தில் முதலாவது வடகிழக்கு இந்தியா மேம்பாட்டு உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. முதலீட்டாளர்களுடன் பல ஒப்பந்தங்களை உறுதி செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
மணிப்பூர் மாநில அரசு, மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் இந்தியா பவுண்டேசன் ஆகியவை இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 175 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துக் கொள்வார்கள்.