கனடா பாராளுமன்றமானது C-45 மசோதா எனவும் அழைக்கப்படுகின்ற கஞ்சா சட்டத்தை (Cannabis Act) நிறைவேற்றியுள்ளதன் மூலம் நாடு முழுவதும் மரிஜீவானாவின் கேளிக்கைப் பொழுதுபோக்கு பயன்பாட்டை (Recreational use) சட்டப் பூர்வமாக்கியுள்ளது.
இதன் மூலம் போதை மருந்தின் கேளிக்கைப் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கியுள்ள முதல் G-7 நாடு கனடாவாகும். மேலும் 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரிஜீவானாவின் பயன்பாட்டை நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக்கிய உருகுவே நாட்டைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் சட்டப்பூர்வ மரிஜீவானா சந்தையைக் கொண்டிருக்க உள்ள உலகின் இரண்டாவது நாடு கனடா ஆகும்.
கஞ்சாவானது (Cannabis) பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அர்ஜென்டினா, இஸ்ரேல், போர்டோ ரிகா, பனாமா, மெக்ஸிகோ, துருக்கி, ஜாம்பியா, ஜிம்பாவே மற்றும் 14 ஐரோப்பிய நாடுகளில் இதன் மருத்துவப் பயன்பாடு சட்டப் பூர்வமாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டமானது பொது இடத்தில் 30 கிராம் எனும் அளவிற்கு உலர்ந்த கஞ்சாவை கொண்டிருக்க வயது வந்தோருக்கு அனுமதி வழங்குகின்றது. ஆனால் இதனை வாங்கவும், நுகரவும் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயது 18 ஆகும்.