அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி சி ஹால், மைக்கேல் ராஸ்பாஷ் மற்றும் மைக்கேல் டபிள்யூ யங் ஆகிய மூன்று மரபியல் (ஜெனடிக்ஸ்) விஞ்ஞானிகளுக்கு உயிரியல் கடிகாரங்களை கட்டுப்படுத்தும் மூலக்கூறு இயக்கவியலை கண்டறிந்ததற்காக நடப்பாண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
தூக்கம், உணவு முறை, ஹார்மோன்கள், மற்றும் உடல் வெப்ப நிலையை முறைப்படுத்தும் உயிரியல் கடிகாரங்கள் (சிர்காடியன் கடிகாரங்கள்) அமைத்தலில் ஜீன்களின் பங்களிப்பை இக்குழு வெளிப்படுத்தியுள்ளது.
இக்கண்டுபிடிப்பு தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் எப்படி புவியின் சுழற்சிக்கு ஏற்ற வகையில் தங்களின் உயிரிக்காலச் சீர்மைகளை (Biological Rhythms) தகவமைத்துக் கொள்கின்றன என விளக்க உதவும்.
பழ வண்டுகளின் உடல் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டு, உயிரி கடிகாரத்தை இயக்கும் மரபணுவை இம்மூவரும் கண்டறிந்துள்ளனர்.
நாட்களின் காலச்சீர்மைக்கு ஏற்றவாறு பொருந்திக் கொள்ள உதவும் வகையில் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களில் ஓர் உள்ளமைக்கப்பட்ட காலங்காட்டி (internal timekeeper) இருப்பதாக விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கருதுகின்றனர்.
இவ்வாறு பசி, தூக்கம் போன்ற உணர்வுகளை உயிரினங்களின் உடலில் தினந்தோறும் நேரம் தவறாமல் தூண்டுவதற்கு, உடலில் தானாகவே அமைந்துள்ள ஒரு 'உயிரி கடிகாரம்'தான் உதவுகிறது என்பது விஞ்ஞானிகளுக்கு நீண்ட காலமாகவே தெரியும்.
மூளையின் சாதாரண செயல்பாட்டிற்கு முக்கியமான தூக்கத்தை சீர்படுத்தலையும் இக்கடிகாரம் மேற்கொள்ளும்.
அந்த உயிரி கடிகாரத்தின் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடுகளால் மன அழுத்தம், 'பைபோலார்' எனப்படும் மிகையுணர்வு மனநோய், மறதி நோய், நரம்பியல் நோய்கள் ஆகியவை ஏற்படுகின்றன