மனிதர்களுக்கு தனி நபர் அடையாள அட்டை (ஆதார்) வழங்குவதைப் போலவே மாடுகளுக்கும் தனித்த அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
மத்திய பால்வள மேம்பாட்டு வாரியம் சார்பில் நாடு முழுவதும் உள்ள மாடுகளுக்கு தனித்த அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நல அட்டை (ஹெல்த் கார்டு) என்ற பெயரில் வழங்கப்பட உள்ள இந்த அட்டையை தமிழகத்தில் முதல் கட்டமாக கோவை, சேலம், வேலூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வழங்கத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, சோதனை அடிப்படையில் கோவை மாவட்டத்தில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள மாடுகளின் உடல் நலனைக் கண்காணிக்கவும், எண்ணிக்கைப் பெருக்கம், நோய் பரவல் உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்கவும், பால் பெருக்கத்தை அதிகரிக்கவும் ஒவ்வொரு மாட்டுக்கும் 12 இலக்கம் கொண்ட தனித்த அடையாள எண் (யு.ஐ.டி.) வழங்கப்பட உள்ளது. இதற்காக பார்கோடு கொண்ட பாலியூரித்தேனால் ஆன அட்டை ஒவ்வொரு மாட்டின் காதிலும் பொருத்தப்படும்.
அத்துடன், இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத் துறையின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
சேகரிக்கப்படும் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதால் மாநிலம் முழுவதிலும் உள்ள மாடுகளின் விவரங்களை சென்னையில் உள்ள அதிகாரிகளாலும், தில்லியில் உள்ள உயர் அதிகாரிகளாலும் உடனடியாகக் காண முடியும்.
கலப்பின மாடு, நாட்டு மாடு, எருமை ஆகியவற்றுக்கு 3 தனித்தனியான வர்ணங்களில் இந்த அட்டை வழங்கப்படும்.
மாடுகளுக்கு தனித்த அடையாள அட்டையை வழங்குவதன் மூலமாகத் திருட்டு, இறைச்சிக்காக கடத்தப்படுவது போன்றவையும் கட்டுப்படுத்தப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.