தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநில வளர்ச்சிக்கான கொள்கைக் குழுவினைத் திருத்தியமைத்து, பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்களை அக்குழுவின் புதிய துணைத் தலைவராக அவர் நியமித்துள்ளார்.
இக்குழுவானது முதலமைச்சரின் தலைமையிலானதாகும்.
இக்குழுவில் ஒரு முழு நேர உறுப்பினர் தவிர்த்து எட்டு பகுதி நேர உறுப்பினர்களும் இருப்பர்.
பேராசிரியர் இராம. சீனிவாசன் அவர்கள் இக்குழுவின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார்.
பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான மு. தீனபந்து, தொழில்துறை வல்லுநர் மல்லிகா சீனிவாசன் மற்றும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் (தி.மு.க) T.R.B. ராஜா, முனைவர் நர்த்தகி நடராஜ், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன் மற்றும் சித்த மருத்துவர் கு. சிவராமன் உள்ளிட்டோர் இக்குழுவின் பகுதி நேர உறுப்பினர்களாக நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
திருமிகு நர்த்தகி நடராஜ் அவர்களை மாநில மேம்பாட்டுக் கொள்கைக் குழுவின் ஒரு உறுப்பினராக நியமிக்கப் பட்டதால் புதிய வரலாறு ஒன்று தமிழகத்தில் எழுதப்பட்டு உள்ளது.
இந்தியாவில் திருநர் ஒருவர் ஒரு மாநில அரசாங்கத்தின் உயர் மட்டக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
1971 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதியன்று முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களால் மாநில திட்டக்குழு உருவாக்கப் பட்டது.
இது மாநிலத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குவதற்குப் பரிந்துரைகளை வழங்கும் ஓர் ஆலோசனை அமைப்பாக நிறுவப்பட்டது.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதியன்று முந்தைய அ.இ.அ.தி.மு.க. அரசினால் இதன் பெயர் மாநில வளர்ச்சிக்கான கொள்கைக் குழு எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டது.