ஐநா அமைப்பினுடைய புதிய மதிப்பீட்டின் படி, 2028-ஆம் ஆண்டு வாக்கில் உலகில் மிகவும் அதிகமான மக்கட்தொகையைக் (Most populous city) கொண்ட நகரமாக டெல்லி காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா அமைப்பின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களுக்கான துறையினுடைய (UN Department of Economic and Social Affairs-UN DESA) மக்கட் தொகை பிரிவு (Population Division) உலக நகரமயமாதலின் வாய்ப்புகள் (World Urbanisation Prospects) எனும் அறிக்கையின் 2018-ஆம் ஆண்டிற்கான திருத்திய பதிவை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2050 - ஆம் ஆண்டில் உலகினுடைய நகர்ப்புறங்களில் உலக மக்கட்தொகையில் 68 சதவீதத்தினர் வசிப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு மற்றும் 2050 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் உலகினுடைய நகர்ப்புற மக்கட்தொகையில் 35 சதவீத வளர்ச்சியானது இந்தியா, சீனா மற்றும் நைஜீரியாவில் உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2050-ஆம் ஆண்டில் இந்தியாவில் கூடுதலாக 416 மில்லியன் நகர்ப்புறவாசிகள் இருப்பர். சீனாவில் கூடுதலாக 255 மில்லியன் நகர்ப்புறவாசிகள் இருப்பர் எனவும் நைஜீரியாவில் 189 மில்லியன் நகர்ப்புறவாசிகள் இருப்பர் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, டோக்கியோ நகரமானது 39 மில்லியன் நகர்ப்புறவாசிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நகரமாகும். அதைத் தொடர்ந்த இடத்தில் 29 மில்லியன் நகர்ப்புறவாசிகளோடு புதுடெல்லியும், 26 மில்லியன் நகர்ப்புறவாசிகளோடு ஷாங்காய் நகரமும் உள்ளது.