சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் (ஜி.எஸ்.டி) கீழ் தேசிய மிகைலாபத் தடுப்பு ஆணையம் அமைக்க மத்திய கேபினெட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பல்வேறு சரக்கு மற்றும் சேவைகளின் ஜி.எஸ்.டி வரி அடுக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறைப்புகளின் பயன்கள் அப்பொருட்களின் விலைவாசிக் குறைவின் மூலம் முழுமையாக இறுதி நுகர்வோர்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்வதற்காக இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வர்த்தகர்கள் வரிக்குறைப்பின் பயனை நுகர்வோர்களுக்கு அளிக்காமல் தாங்களே மிகையாக லாபம் ஈட்டுவதைத் தடுக்கும் நோக்கிலும் இந்த ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த அமைப்பில் தலைவராக இந்திய அரசாங்கத்தின் செயலாளர் நிலையிலுள்ள மூத்த அதிகாரி ஒருவரும், நான்கு மத்திய அல்லது மாநில அரசுகளின் தொழிற்நுட்ப உறுப்பினர்களும் இருப்பர்.
சரக்கு மற்றும் சேவை வரியின் சட்டத்தில் உள்ளமைக்கப்பட்டுள்ள மிகை லாப தடுப்பு கூறானது வர்த்தக நிறுவனங்களின் மிகை லாப மீட்டலை தடுப்பதற்காக மத்திய கலால் மற்றும் சுங்க வரி ஆணையத்தின் பாதுகாப்பிற்கான இயக்குனரகம் (Directorate General of Safeguards), ஒவ்வொரு மாநிலத்திலுள்ள நிலைக்குழு(Standing Committee),சோதனைக் குழு (Screening Committees),மற்றும் தேசிய மிகைலாப தடுப்பு ஆணையம் போன்றவை உள்ளடங்கிய நிர்வாக முறைமையை ஏற்படுத்த வழிவகை செய்கிறது.