முடிவுக்கு வந்தது "கேசினி' விண்கலத்தின் ஆய்வுப் பயணம்
September 16 , 2017 2671 days 687 0
சனி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் கடந்த 1997-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட “கேசினி’ விண்கலம், தனது செயல்பாட்டை செப்டம்பர் 15 உடன் நிறுத்திக் கொண்டது.
ஏறத்தாழ 20 ஆண்டு கால ஆராய்ச்சியில் 5 லட்சம் புகைப்படங்களையும், பல லட்சக்கணக்கான தரவுகளையும் அந்த விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஎஸ்ஏ), இத்தாலிய வான்வெளி ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் “கேசினி’ விண்கலத்தை நாசா வடிவமைத்தது. சனி கிரகத்தையும், அதன் வளையங்கள் மற்றும் துணைக் கோள்களையும் ஆராய்வதற்காக கடந்த 1997-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், சனி கிரகத்தின் உள்பரப்புக்குள் “கேசினி’ விண்கலத்தைச் செலுத்த நாசா விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதனால், அந்த விண்கலத்தின் தொடர்புகள் துண்டிக்கப்படும் என்று தெரிந்திருந்தும், அடுத்தக்கட்ட சோதனைக்காகவும் எதிர்கால ஆராய்ச்சிக்காக கிரகத்தின் நிலவுகளை சேதமின்றி பாதுகாப்பதற்காகவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.