12000 குதிரைத் திறன் (Horsepower-HP) கொண்ட இந்தியாவின் முதல் அதிவேக மின் இயந்திரம் பீகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா எலெக்ட்ரிக் எஞ்சின் தொழிற்சாலையிலிருந்து (Electric Locomotive Factory) பிரதமரால் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிப்போம் (Make-in-India) என்ற திட்டத்தின் முதல் பெரிய திட்டமான இத்திட்டம் பிரெஞ்சு நிறுவனமான ஆல்ஸ்டோம் (Alstom) நிறுவனத்துடன் இணைந்து இந்திய ரயில்வே நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், 12000 குதிரைத்திறன் மற்றும் அதற்கு மேலான திறன் கொண்ட எலக்ட்ரிக் எஞ்சின்களைக் கொண்டுள்ள நாடுகளான இரஷ்யா, சீனா, ஜெர்மனி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளடங்கிய சிறப்புப் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
தற்போது வரை இந்திய ரயில்வே துறையால் 6000 குதிரைத் திறன் கொண்ட மின் எஞ்சின்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 12000 குதிரைத் திறன் மின் எஞ்சின்கள் சரக்கு ரயில்களில் இணைக்கப்படும். மேலும் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது ஆகியவற்றின் போக்குவரத்திற்கு இவை பயன்படுத்தப்படும்.