காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாநில அரசு பேட்டரியினால் (மின்கலன்) இயங்கக் கூடிய மின்சார குளிர்சாதனப் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் பேருந்துகள் தொடக்கத்தில் சென்னையில் உள்ள பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தினால் குறிப்பிடப்பட்ட வழித் தடங்களில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட விருக்கின்றன.
32 இருக்கைகளைக் கொண்டுள்ள இந்தப் பேருந்துகள் புவியிடங்காட்டி, தீ கண்காணிப்பு மற்றும் தீயணைப்பு அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஒருமுறை மின்னேற்றினால் இந்தப் பேருந்துகள் 120 கிலோ மீட்டர் வரை செல்லும்.
இந்தப் பேருந்துகள் அசோக் லைலண்ட் நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளன.
மின்சாரப் பேருந்துகளைத் தயாரிப்பதற்காக இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட சி -40 நகரங்கள் காலநிலைத் தலைமைக் குழு என்ற அமைப்புடன் தமிழ்நாடு மாநில அரசு 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
விரைவில் இந்தியாவில் மின்சார வாகனங்களை வேகமாக ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் உற்பத்தி செய்தல் என்ற திட்டத்தின் இரண்டாம் நிலையின் கீழ் (FAME India Scheme) தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கியமான நகரங்களில் இது போன்ற 525ற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.