மே 6 ஆம் தேதியன்று, இங்கிலாந்தின் லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் அபேய் என்ற மாளிகையில் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு நாற்பதாவது அரச ஆட்சியாளராக முடி சூட்டப் பட்டதோடு, அரசி கன்சார்ட் கமிலா அவர்களுக்கும் முடிசூட்டப்பட்டது.
இது கோல்டன் ஆர்ப் நடவடிக்கை என்றும் அழைக்கப் படுகின்றது.
இந்த முடிசூட்டுச் விழாவானது 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகவும், 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு மன்னருக்கு நடைபெறும் முதல் விழாவும் ஆகும்.
70 வருடங்களுக்கு முன், 1953 ஆம் ஆண்டில் அவரது தாயாரான இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டுச் விழாவானது நடத்தப் பட்டது.
1937 ஆம் ஆண்டில் மன்னர் ஆறாம் ஜார்ஜ் என்பவரின் முடிசூட்டுச் விழாவானது நடத்தப் பட்டது.
முதன்முறையாக, ஐக்கியப் பேரரசின் பிரதமரும், தெற்காசிய நபரும், இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவருமான ரிஷி சுனக், வேதாகமத்தில் உள்ள வாசகத்தினைப் படித்தார்.
தெற்காசிய மற்றும் முஸ்லீம் பிரித்தானியரான ஸ்காட்லாந்து நாட்டின் பிரதான அமைச்சர் ஹம்சா யூசுப், அந்நாட்டின் பாரம்பரிய உடையான கில்ட்டினை அணிந்து இருந்தார்.
ஒரு வெல்ஷ் பாடலுடன் விழா தொடங்கப்பட்ட இந்த விழாவில் ஒரு கருப்பின நன்னூல் பாடகர் மற்றும் பெண் பேராயர் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.