அமெரிக்க நூலாசிரியரான ஜார்ஜ் சாண்டர் அவர்களுக்கு 2017ஆம் ஆண்டிற்கான மிக உயரிய இலக்கிய விருதான மேன்புக்கர் பரிசு அவருடைய முதல் முழு நீள நாவலான “லின்கான் இன் த பர்டோ” (Lincoln in the Bardo) விற்காக வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அமெரிக்கர்கள் இவ்விருதினை பெறுகின்றனர். இதற்கு முன் 2016ல் பவுல் பீட்டி தன் “தி செல்அவுட்” நாவலுக்காக மேன் புக்கர் பரிசு பெற்றார்.
மான் புக்கர் பரிசு
மான் புக்கர் பரிசு (The Man Booker Prize) என்பது ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள புதினங்களுக்கு வழங்கப்படும் பரிசாகும். இப்பரிசு 1969 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பரிசினைப் பெறும் நாவல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, இங்கிலாந்து நாட்டில் பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.
இதைப்போன்று, மான் புக்கர் சர்வதேசப் பரிசு (The Man Booker International Prize) 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்பரிசு இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்தது. எந்தவொரு மொழியிலும் முதலில் எழுதப்பட்டு , ஆங்கிலத்தில் பரவலாக கிடைக்கப்பெறும் படைப்புகள் இப்பரிசுக்கு தகுதி பெறும். புதினங்களும் , சிறுகதைத் தொகுப்புகளும் இப்பரிசுக்கு தகுதி உடையவையாகும்.
இந்த விருது துவங்கப்பட்ட காலத்தில் காமன்வெல்த் நாடுகள் , அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்க (பின்னர் ஜிம்பாப்வே) குடிமக்கள் பரிசு பெற தகுதிப் பெற்றிருந்தார்கள்.
2016 ஆம் ஆண்டில் இந்த விருது மறுசீரமைக்கப்பட்டு, தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புத்தகத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்த விருதோடு வழங்கப்படும் ஐம்பது ஆயிரம் பிரிட்டன் பவுண்டுகள் (£50,000), ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் இடையில் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே பால் பேட்டி மற்றும் ஜார்ஜ் சான்டர்ஸ் ஆகிய அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் இப்பரிசினை வென்றனர்.