மோட்டார் வாகனங்களுக்கான புதிய ஆயுட்கால வரி விகிதம்
October 15 , 2023 408 days 357 0
பத்தாண்டுகளுக்குப் பிறகு, புதிய வாகனங்களின் ஆயுட்கால வரி விகிதத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வண்டிகள் (விசையுந்துகள்) வரி விதிப்புச் சட்டத்தினை திருத்தியமைக்கும் மசோதாவானது சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டது.
ஒரு புதிய இருசக்கர வாகனங்களுக்கான ஆயுட்கால வரி விகிதம் ஆனது, அதன் மொத்த விலை 1 இலட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 12% ஆகவும், அதன் மொத்த விலை ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் 10% ஆகவும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
புதிய மகிழுந்துகள் மற்றும் பிற புதிய மோட்டார் வண்டிகளுக்கான ஆயுட்கால வரி விகிதம் ஆனது, அந்த வாகனத்தின் விலை 20 இலட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 20% ஆக இருக்கும்.
10 இலட்சம் முதல் 20 இலட்சம் ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட புதிய மகிழுந்துகள் மற்றும் பிற புதிய மோட்டார் வண்டிகளுக்கான ஆயுட்கால வரி விகிதம் ஆனது 18% ஆக இருக்கும்.
5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட வாகனங்களுக்கான ஆயுட்கால வரி விகிதம் ஆனது 13% ஆக இருக்கும்.
5 லட்சம் ரூபாய்க்கு குறைவான மதிப்பு கொண்ட வாகனங்களுக்கான ஆயுட்கால வரி விகிதம் 12% ஆக இருக்கும்.
வாகனப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகளை நிறைவு செய்த மோட்டார் வண்டிகளுக்கு (போக்குவரத்து வாகனங்கள் தவிர) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1,500 ரூபாய் பசுமை வரி செலுத்த வேண்டும் என்று இந்த மசோதாவில் குறிப்பிடப் பட்டு உள்ளது.
வாகனப் பதிவு செய்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த இருசக்கர வாகனங்களுக்கு, அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 750 ரூபாய் பசுமை வரி செலுத்த வேண்டும்.