யுனெஸ்கோ நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) ஒரு சிறப்பு நிறுவனமாகவும் செயல்படுகிற யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவானது அதன் மூன்று அரசியலமைப்பு உறுப்புகளில் ஒன்றாகும்.
பொது அவை மற்றும் செயலகம் அதன் மற்ற இரண்டு அமைப்புகளாகும்.
2025 ஆம் ஆண்டு வரை நான்கு வருடக் காலத்திற்குப் பதவி வகிக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டு இந்தியாவானது யுனெஸ்கோ நிர்வாகக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டது.
ஒரு தலைவர், ஆறு துணைத் தலைவர்கள் மற்றும் நிரந்தரக் குழுக்கள் மற்றும் அந்தக் குழுக்களின் ஐந்து தலைவர்கள் உட்பட 12 உறுப்பினர்களை நிர்வாகக் குழுவின் பணியகமானது கொண்டுள்ளது.
யுனெஸ்கோவின் அனைத்து உறுப்பினர்களும் ஆறு பிராந்திய தேர்தல் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு அத்தகைய ஒவ்வொரு குழுவும் ஒரு துணைத் தலைவரால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது.
ஆஸ்திரேலியா, வங்காளதேசம், சீனா, குக் தீவுகள், இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், கொரியக் குடியரசு, இலங்கை மற்றும் வியட்நாம் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுதி IV பிரிவின் துணைத் தலைவருக்கான இந்தத் தேர்தலில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
குழு I (மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகள்), குழு II (கிழக்கு ஐரோப்பிய நாடுகள்), குழு III (லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள்), குழு IV (ஆசிய மற்றும் பசிபிக் நாடுகள்), குழு V (a) (ஆப்பிரிக்கன் மாநிலங்கள்) மற்றும் குழு V (b) (அரபு நாடுகள்) ஆகியவை அந்த ஆறு குழுக்களாகும்.