கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மத்திய வங்கி தனது நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தை திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே நடத்தியுள்ளது.
இது 2019-20 நிதியாண்டிற்கான ரிசர்வ் வங்கியின் இரு மாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் 7வது நிதிக் கொள்கை அறிக்கையாகும்.
ரிசர்வ் வங்கி இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.3.74 லட்சம் கோடியைச் செலுத்த உள்ளது.
ரெப்போ விகிதம் 75 அடிப்படைப் புள்ளிகள் (Basis points) குறைக்கப் பட்டு 4.4% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 90 அடிப்படை புள்ளிகள் குறைக்கப் பட்டு 4% ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
அனைத்துக் கடன்களுக்கும் மூன்று மாத கால அவகாசம் வழங்க ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் (வீட்டுக் கடன் வழங்குனர்களும் பிற நிதி நிறுவனங்களும் இதில் அடங்கும்) உத்தரவு இட்டுள்ளது.
ரொக்க இருப்பு விகிதம் 100 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு நிகர நேர மற்றும் தேவைப் பொறுப்புகளில் 3% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
இது வங்கிகளுக்குள் ரூ.1,37,000 கோடி மதிப்புள்ள நிதியை வெளியிடும்.
மத்திய வங்கியின் ஒட்டுமொத்த நிதி உட்செலுத்துதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீதமாக உள்ளது.
ரிசர்வ் வங்கி 2020 ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் நிகர நிலையான நிதி விகிதத்தை (Net Stable Funding Ratio) அறிமுகப்படுத்த உள்ளது.
இது கிடைக்கப் பெறும் நிலையான நிதியுதவியின் அளவுக்கும் தேவைப்படும் நிலையான நிதியுதவியின் அளவுக்கும் இடையிலான ஒரு விகிதமாகும்.
21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இவை செயல்படாத சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட வேண்டும் என்று கவலைப் படாமல், நிறுவனங்களுக்கானச் செயல்பாட்டு மூலதனச் சுழற்சியை மறுசீரமைக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
விளிம்பு நிலை வசதி என்று அழைக்கப்படும் ஒரு அவசர கடன் வழங்கு முறையின் கீழ் 1.37 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கச் செய்யப் படும்.
இதன் மூலம் வங்கிகள் தங்களது வைப்பு நிதிகளின் மேல் தற்போது உள்ள 2 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து 3 சதவிகிதம் என்ற அளவிற்கு கடன் வாங்க இயலும்.