கோவாவின் சுதந்திரப் போராட்ட வீரர் லிபியா லோபோ சர்தேசாய் (100 வயது), மாநில விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியப் பங்கு வகித்ததற்காக பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.
1955 முதல் 1961 ஆம் ஆண்டு வரை, லிபியாவும் அவரது சகா வாமன் சர்தேசாய்யும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகளில் இருந்த படி ஒரு தலைமறைவு வானொலி நிலையத்தை நடத்தினர்.
நான்கரை நூற்றாண்டு காலப் போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற்ற அச்செய்தியை 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியன்று வானொலியில் அறிவித்தவர் இவரே ஆவார்.
1961 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியன்று காலை, லிபியாவும் வாமனும் இந்திய விமானப்படை (IAF) விமானத்தில், ஒரு ரேடியோ அலைபரப்பியினையும், விமானத்தின் அடிப் பகுதியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கியையும் ஏற்றிக் கொண்டு, பனாஜி மீது பறந்தவாறே பல துண்டுப் பிரசுரங்களை வீசி, போர்த்துகீசியம் மற்றும் கொங்கனி மொழிகளில் போர்த்துகீசியர்கள் சரணடைந்ததாக அறிவித்தனர்.