நாட்டில் மூங்கில் சாகுபடியை அதிகப்படுத்தும் முயற்சியில் இந்திய வனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவசரநிலைச் சட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தச் சட்டம், காடுகள் அல்லாத பகுதிகளில் மூங்கில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதனை வெட்டுவதற்கோ அல்லது அதனை வேறு இடத்திற்கு அனுப்புவதற்கோ அனுமதி பெற வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதை உறுதி செய்கிறது.
1927ஆம் ஆண்டின் இந்திய வனச் சட்டத்தின் பிரிவு 2(7) மீதான இந்த திருத்தம் விவசாயிகளை அவர்களது வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் மூங்கில் சாகுபடி செய்ய ஊக்குவிக்கும்.
தொழில்நுட்ப ரீதியாக மூங்கில் என்பது ஒரு வகையான புல் தாவரமாகும். ஆனாலும் 1927ம் ஆண்டின் இந்திய வனச் சட்டத்தின் கீழ் இது மரமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா மூங்கில் சாகுபடியில் மிகப்பெரிய பயிரிடுமிடத்தை கொண்டுள்ளது. மேலும் மூங்கில் மரபணு வளங்களைப் பொறுத்தவரையில் சீனாவுக்குப் பிறகு இரண்டாவது வளமான நாடு இந்தியாவாகும்.
உலக அளவில் மூங்கில் சாகுபடிக்கான பரப்பளவில் 19 சதவிகித இடத்தை இந்தியா பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவின் சந்தைப் பங்களிப்பு இத்துறையில் 6 சதவிகிதம் மட்டுமே.
இந்த சட்டத்திருத்தம் சுற்றுச்சூழல் பயன்களைத் தவிர்த்து ஊரக மற்றும் தேசியப் பொருளாதாரத்தின் அடிப்படையில் மூங்கிலின் பயன்பாடுகளை அதிக அளவில் கட்டவிழ்த்து விடும்.
வனப்பகுதிகளில் வளர்க்கப்படும் மூங்கில்கள் இந்திய வனச்சட்டம் 1927-ன் படியே தொடர்ந்து நிர்வகிக்கப்படும்.