பொருளாதார உறவுகள், வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மீதான சீன - இந்திய கூட்டுக் குழுவின் (China-India joint-group on Economic Relations, Trade, Science & Technology) 11-வது சந்திப்பு அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் ஜோங்ஷான் இந்த சந்திப்பிற்குத் தலைமைத் தாங்கினர்.
இந்த சந்திப்பில் இரு நாடுகளும் 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில் கையெழுத்திட்ட 5 வருடத்திற்கான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பிற்கான மேம்பாட்டுத் திட்டங்களில் (5 Year Development Programme for Economic and Trade Cooperation - DPETC) அடையாளம் காணப்பட்ட தொடக்கங்களை (Initiatives) முன்னெடுத்துச் செல்வதைத் தொடர ஒப்புக் கொண்டுள்ளன.
சீனப் பொருட்களுக்கு ஏழாவது மிகப்பெரிய ஏற்றுமதி இலக்காக (Export Destination) இந்தியா உருவாகியுள்ளது. மேலும் இந்தியா சீனாவுக்கு 24-வது பெரிய ஏற்றுமதியாளர் நாடாகும்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் உலகின் மிகப்பெரிய வளரும் பொருளாதார நாடுகளாகும். இவை இரண்டும் உலக உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 20 சதவீதத்தினையும், உலக மக்கட் தொகையில் 35 சதவீதத்தினையும் கொண்டுள்ளன.
ஆனால் இவற்றினுடைய இருதரப்பு வர்த்தகத்தின் ஒப்பீட்டு அளவானது உலக வர்த்தகத்தின் 1 சதவீதத்தைக் காட்டிலும் குறைவானதாகும்.